மகனை நாய் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்த தாய்: 20 ஆண்டு சிறை தண்டனை!

0
81

தனது மகனை நாய்க் கூண்டில் அடைத்து உணவளிக்காமல் சித்ரவதை செய்த தாய்க்கு ஒஸ்திரியா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஒஸ்திரியாவைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவர் தனது பன்னிரெண்டு வயது மகனை கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார். கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2022 ஜூலை மற்றும் நவம்பர் இடையில் நடந்துள்ளது. கடுமையான குளிர்காலத்தில் தனது மகனை நாய்க் கூண்டில் போட்டு குளிர்ந்த நீரை ஊற்றி அடித்து பட்டினி போட்டுள்ளார்.

பிள்ளைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கிய பெண்ணின் நண்பருக்கு நீதிமன்றம் 14 வருட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.

மேலும் பெண்ணுக்கு மனநல சிகிச்சை அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்ணை பரிசோதித்த மனநல மருத்துவர், அவருக்கு கடுமையான மனநோய் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு சமூக சேவகர் மூலம் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் சிறுவனை கண்டுபிடித்தபோது ​​சிறுவன் முடங்கி கிடந்துள்ளார். எவ்வாறாயினும் தனது பிள்ளை நல்வழிப்படுத்துவதற்காக இதனை செய்ததாக தாய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் தாயின் தொடர்ச்சியான துன்புறுத்தல் காரணமாக சிறுவனின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அவதானித்துள்ளது. இதன் பின்னணியிலேயே பெண்ணுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.