சூப்பர் தேர்தல் ஆண்டு – போலிச் செய்திகளின் ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும்: தகவல் முடக்கம் மேலோங்கும் அபாயம்

0
132

உலகளாவிய ரீதியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் பாரதூரமான அச்சுறுத்தலாகவும் சர்வதேச மற்றும் உள்நாட்டு, சமூக மற்றும் அரசியல் பிளவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஏதுவான காரணியாகவும் தவறான தகவல் பகிர்வு (Misinformation and Disinformation) மற்றும் போலிச் செய்தியின் (Fake news) பரவல் காணப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆண்டுக்கான உலகளாவிய இடர் அறிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பில் நிபுணர்களின் கூற்றுப்படி தேர்தல்களுக்கான முன்னோடியில்லாத ஆண்டில் உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக தவறான தகவல் (False Information) காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதாரம், சுற்றுச்சூழல், புவிசார் அரசியல், சமூக மற்றும் தொழில்நுட்ப அபாயங்கள் உள்ளிட்ட 34 காரணிகளை உள்ளடக்கிய தரவரிசையின் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பகுப்பாய்வு செய்யப்பட்ட நாடுகளின் தெரிவுகளில் தவறான தகவல் பகிர்வு மற்றும் போலிச் செய்தியின் பரவல் முதன்மை அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

தரப்படுத்தப்படும் அபாயங்கள்

உலகளாவிய அபாயங்கள், குறுகியகால மற்றும் நீண்டகால தீவிரத்தன்மையின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் குறுகியகால அச்சுறுத்தல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் என்ற அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் தவறான தகவல் பகிர்வு மற்றும் போலிச்செய்திகளின் அச்சுறுத்தல் என்ற விடயம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த அச்சுறுத்தல்களாக மோசமான வானிலை நிகழ்வுகள், சமூக துருவமயப்படுத்தல், இணைய பாதுகாப்பின்மை, பிராந்தியங்களுக்கு இடையேயான ஆயுத மோதல், பொருளாதார வாய்ப்பின்மை, பணவீக்கம், தன்னிச்சையான இடம்பெயர்வு, பொருளாதார வீழ்ச்சி, சூழல் மாசு ஆகிய காரணிகளும் முக்கியம் பெறுகின்றன.

அதேபோல் நீண்டகால அச்சுறுத்தல்கள் என்ற அடிப்படையில் மோசமான வானிலை நிகழ்வுகள், புவியியல் அமைப்புசார் முக்கியமான மாற்றங்கள், பல்லுயிர் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவு, இயற்கை வளங்களின் பற்றாக்குறை, தவறான தகவல் மற்றும் போலிச்செய்திகளின் பரவல், AI தொழில்நுட்பங்களின் எதிர்மறையான விளைவுகள், தன்னிச்சையான இடம்பெயர்வு, இணைய பாதுகாப்பற்ற தன்மை, சமூக துருவமயப்படுத்துதல் மற்றும் சூழல் மாசுபாடு என்பன தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மோசமான பாதிப்பை எதிர்கொள்ளப்போகும் இந்தியா

இவற்றில் போலிச்செய்தி மற்றும் தவறான தகவல்கள் அதிகமாக பரவும் நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடர்களிலும் தவறான தகவல் மற்றும் போலிச்செய்திகளின் ஆக்கிரமிப்பானது, தொற்று நோய்கள், சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகள், சமத்துவமின்மை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றை விடவும் முதன்மையாகக் கருதப்படும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக நிபுணர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுமார் 1.4 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலின் போதும் போலிச் செய்திகள், தவறாத தகவல் பகிர்வுகள் என்பன மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டும் நிபுணர்கள் இம்முறையும் தேர்தல் காலங்களில் மிக மோசமான வன்முறைகள் வரையில் இதன் தாக்கங்கள் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

தேர்தல் ஆண்டாக மாறும் 2024

Anchor Change Election Cycle Tracker மற்றும் Statista இன் கூடுதல் ஆய்வறிக்கையின்படி, 2024 உலகளவில் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தேசியத் தேர்தல்களை மக்கள் எதிர்கொள்கின்றனர். சுமார் 2 பில்லியன் வாக்காளர்கள் – அண்ணளவாக உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் இந்த ஆண்டு வாக்களிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய 2024 ஆம் ஆண்டானது சூப்பர் தேர்தல் ஆண்டு அல்லது வரலாற்றில் மிகப்பெரிய தேர்தல் ஆண்டு என அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளதுடன், முக்கியமாக அமெரிக்கா, மெக்சிகோ, இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இந்த நாடுகளில் போலிச் செய்தி மற்றும் தவறான தகவல் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை மக்களும் இந்த ஆண்டில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளனர். இவ்வாறான பின்னணியில் போலிச்செய்திகளின் பரவல் மற்றும் தவறான செய்தி பகிர்வு என்பன இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது.

மேலும் எல் சால்வடோர், சவுதி அரேபியா, பாக்கிஸ்தான், ருமேனியா, அயர்லாந்து, செக்கியா, அமெரிக்கா, சியரா லியோன், பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகளின் தாக்கங்களின் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு எதிர்கொள்ளும் 34 அபாயங்களில் மிக மோசமான ஆபத்துகளில் முதன்மையாக இந்த போலிச் செய்தியின் பரவல் இருக்கும் எனவும், நீண்டகால அச்சுறுத்தல்களில் முதல் நான்கு அல்லது ஆறு இடங்களுக்குள் போலிச் செய்தியின் தாக்கம் இருக்கும் எனவும் உலகப் பொருளாதார மன்றம் சுட்டிக்காட்டுகின்றது.

உலகப் பொருளாதார மன்ற ஆய்வாளர்கள் கருத்துப்படி, “இந்த தேர்தல் செயல்முறைகளில் தவறான தகவல்களும் போலிச் செய்திகளும் அதிகளவில் இருப்பதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் உண்மையான மற்றும் உணரப்பட்ட சட்டபூர்வமான தன்மையை தீவிரமாக சீர்குலைக்கும், அரசியல் அமைதியின்மை, வன்முறை மற்றும் பயங்கரவாதம், ஜனநாயக செயல்முறைகளின் நீண்டகால பின்னடைவு ஆகியவற்றை அபாயப்படுத்தலாம்.” என கூறப்படுகிறது.

அதிகரிக்கும் தணிக்கை ஆபத்து

தேர்தல்களுக்கு அப்பால், பொது சுகாதாரம் முதல் சமூக நீதி வரையிலான பிரச்சினைகள் குறித்த பொது உரையாடலில் இந்த போசமான தன்மை ஊடுருவி, யதார்த்தத்தின் உணர்வுகள் மேலும் துருவப்படுத்தப்படுவதுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், உண்மை குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதால், உள்நாட்டு பிரச்சாரம் மற்றும் தணிக்கையின் ஆபத்தும் அதிகரிக்கும்.

தவறான மற்றும் போலியான தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கங்கள் “உண்மை” என்று தீர்மானிப்பதன் அடிப்படையில் தகவல்களைக் கட்டுப்படுத்த அதிக அதிகாரம் அளிக்கப்படலாம். இணையம், பத்திரிகை மற்றும் பரந்த தகவல் ஆதாரங்களுக்கான அணுகல் தொடர்பான சுதந்திரங்கள் ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ளதால், பரந்த அளவிலான நாடுகளில் தகவல் முடக்கம் என்ற கோட்பாடு மேலோங்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையை எடுத்துக் கொண்டாலும் தற்போது அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிகழ்நிலை காப்புச்சட்டத்தின் பாய்ச்சலானது ஜனநாயக வரம்புகளை மீறிச்செல்வதுடன் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் ஆகியவற்றையும் மிக மோசமாக பாதிக்கும் என நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் போலிச்செய்திகள், தவறான தகவல் பகிர்வின் விளைவுகளும் இதில் தாக்கம் செலுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இலங்கையில் போலிச்செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதிலும் தவறான தகவல் பகிர்வுகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதிலும் தரவு சரிபார்த்தல் போன்ற விடயங்களில் பணியாற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் factseeker தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதுடன் இலங்கையில் வேறு சில நிறுவனங்களும் இதனை முன்னெடுத்து வருகின்றன.