பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: 11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0
148

2002ஆம் ஆண்டு குஜராத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அவரது உறவினர்களை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்ட விடுதலையை இந்திய உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

குறித்த 11 நபர்களும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கு மாநிலமான குஜராத் சிறைச்சாலை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

தண்டனையில் விலக்கு அளிக்கவோ அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு முடிவெடுப்பதுதான் பொருத்தமானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

தற்போது 40 வயதுடையவராக இருக்கும் பில்கிஸ் பானு, 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கடந்த 2002 ஆம் ஆண்டு வன்முறை காலத்தில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானார்.

இந்த வன்முறை சம்பவங்களின் போது, சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் ஆவர். இந்தியாவில் பதிவான மிக மோசமான மதக் கலவரங்களில் இதுவும் ஒன்றாகும்.

வன்முறையில் கொல்லப்பட்ட 14 பேரில் ஏழு பேர் பில்கிஸ் பானுவின் உறவினர்கள் ஆவர். இந்தக் காலக் கட்டத்தில் தற்போதைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் முலமைச்சராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.