மினி டாக்டராக மாறப்போகும் ஆப்பிள் வாட்ச்

0
189

வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில் மனிதனின் உடல் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு ஆப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு புதிய வகை ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஆப்பிள் வாட்ச் மாடல்களால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதை ஏற்கனவே நாம் அறிந்துள்ளோம். எனினும், பலத் தரப்பட்ட வல்லுநர்களால் ஆப்பிள் வாட்சுகள் பரிந்துரைக்கப்பட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார்களின் தரம் தான்.

உடலியல் மாற்றங்களை கணித்து யூசர்களுக்கு அது சம்பந்தமான தகவல்களை வழங்குகிறது. மேலும் இது 2024 இல் அறிமுகம் செய்யப்படும் புதிய ஆப்பிள் வாட்ச் 10 வகைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. என்னதான் ஆப்பிள் வாட்சுகள் பல வகைகளில் அதன் யூசர்களுக்கு பலன் அளித்தாலும், பெரிதாக புதிய அம்சங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

இதன் காரணமாக பழைய தயாரிப்புகளிலேயே மக்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த சூழலில் ஆப்பிள் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் முனைப்பில் சோதனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அதிகப்படியான இரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத் திணறல் போன்றவற்றை அறிந்து, உடனடியாக மருத்துவ உதவியை நாட யூசர்களுக்கு சமிக்ஞை அனுப்பும் சேவையை ஆப்பிள் சோதனை செய்து வருகிறது.

இந்த சேவையை அறிமுகம் செய்யும் வேளையில், தலைசிறந்த ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பை வழங்கும் நிறுவனங்களில் ஆப்பிள் முதல் வரிசையில் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எதிர்கால ஆப்பிள் வாட்சு மாடல்களை மேம்படுத்துவதற்கு இவை தகுதியான அம்சங்களாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பபட்டுள்ளது.

முந்தைய மாடல்களை விட தலைசிறந்த புதிய சிப்செட், பிரகாசமான டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் செப்டம்பர் மாதத்தில் சந்தைக்கு வந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, பெரிதாக யூசர்களுக்கு ஊக்கத்தை வழங்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரவிருக்கும் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 இல் மேற்கூறிய புதிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

வாட்ச் சீரிஸ் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவை தற்போது யூசரின் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்கவும், உடல் வெப்ப விகிதத்தை அளவிடவும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பை அறிந்து கொள்ளவும் ECG மானிட்டராகவும் செயல்பட உதவுகின்றன. இரண்டு வாட்சுகளும் S9 SiP சிப்செட்களால் இயக்கப்படுகின்றன. இந்த கடிகாரங்கள் கிட்டத்தட்ட ஒரு மினி டாக்டர் போலதான்.

ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களை முதல் கார்பன்-நியூட்ரல் தயாரிப்பு என்று கூறுகிறது. இதில் இருக்கும் புதிய அம்சம் என்னவென்றால் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை சேர்த்து இரண்டு முறை அழுத்தினால், அழைப்புகள், டைமர், அலாரம் போன்றவற்றைக கட்டுப்படுத்தலாம்.