உங்கள் வேலைக்கே ஆப்பு வைக்கலாம்… AI தொழில்நுட்பத்தின் அடுத்த பகீர்!

0
179

Artificial Intelligence | AI தொழில்நுட்பத்தால் தாங்கள் வேலையிழக்க நேரிடலாம் என்று 82% பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2023-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கமே தொழில்நுட்ப உலகின் பணியாளர்களுக்கு பெரும் இடியாகத்தான் தொடங்கியது. உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களான ஃபேஸ்புக், டிவிட்டர், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் இருந்து எண்ணற்ற பணியாளர்கள் வேலை இழக்க தொடங்கினர்.

ஒரு பக்கம் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை தொழில்நுட்பமானது, பணியாளர்கள் செய்யக் கூடிய வேலைகளை சில, பல நொடிகளில் செய்து முடித்து விடுகிறது என்பதும், பொருளாதார மந்த நிலை காரணமாகவும் ஊழியர்கள் வேலை இழக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியது. எதிர்வரும் புத்தாண்டு அதைவிடவும் சிக்கலானதாக இருக்குமோ என்ற அச்சம் தொழில்நுட்ப பணியாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

அதிலும் 82 சதவீதப் பணியாளர்கள் இந்த செயற்கை தொழில்நுட்பத்தின் விளைவால் வேலையிழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.Skills Landscape 2024 என்ற தலைப்பில் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊழியர்களின் வேலை உத்தரவாதத்திற்கு எந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தொழில்நுட்ப பணியாளர்கள், மாணவர்கள் உள்பட சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக தாங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணர்வதாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 82 சதவீதம் பேர் தெரிவித்தனர். எனினும், புத்தம் புதிதாக வெளிவரக் கூடிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள விரும்புவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற சுமார் 78 சதவீதம் பேர் கூறினர்.

ஆக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, வேலைவாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் புதிது, புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மேலோங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

file image

அதே சமயம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக தங்கள் அறிவுத்திறன் வளர்ந்துள்ளது என்று 39 சதவீத பணியாளர்களும், இந்த தொழில்நுட்பம் குறித்து தங்களுடைய நிறுவனங்கள் சார்பில் முறையான பயிற்சி கொடுக்கப்படவில்லை என்று 43 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹீரோ வெயிர்டு என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அக்‌ஷய் முஞ்சல் கூறுகையில், “மாற்றம் அடைந்துள்ள மற்றும் நிலையற்ற வேலைவாய்ப்பு தளத்திற்கு ஏற்ப, தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பணியாளர்கள் மத்தியிலும், பட்டதாரிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் செயற்கை தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு அதிக மவுசு இருக்கும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது குறிப்பிடத்தக்கது.