இலங்கையின் கூட்டு நிறுவனமொன்றின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா

0
138

இலங்கையில் கூட்டு நிறுவனமொன்றின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

31 மார்ச் 2024 முதல் இலங்கையின் முன்னணி நிறுவனமான ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து கஸ்தூரி செல்லராஜா வில்சன் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கஸ்தூரி செல்லராஜா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஹேமாஸ் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கும் முன் குழுவிற்குள் பல வணிக நடவடிக்கைகளை வழிநடத்தியுள்ளார்.

அக்டோபர் 2020 இல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அவர் தனது பதவிக் காலத்தில் ஹேமாஸின் வளர்ச்சி மற்றும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

அவரது ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், ஹேமாஸ் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் நுகர்வோர், சுகாதாரம் மற்றும் மொபிலிட்டி ஆகியவற்றில் அதன் சந்தை நிலைகளை வலுப்படுத்தியுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு வணிக நலன்கள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களை மேற்பார்வையிட்டு, உலகளாவிய நிறுவனத்துடன் புதிய பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதால், கஸ்தூரி செல்லராஜா இராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்துள்ளார்.

இந்த தனித்துவமான வாய்ப்பு இலங்கையில் தனது கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் அதே வேளையில் சர்வதேச அரங்கில் செயற்படுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கின்றது.

எவ்வாறாயினும், இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியுடன் அவர் தனது தொடர்பைத் தக்க வைத்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பதவி விலகல் குறித்து ஹேமாஸ் குழுமத்தின் தலைவர் கருத்து வெளியிடுகையில்,

“கஸ்தூரி செல்லராஜா ஹேமாஸுடன் 21 வருடங்கள் இருந்தபோதும், குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போதும் நிறுவனத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கஸ்தூரி செல்லராஜாவின் அர்ப்பணிப்பான சேவையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், அவருடைய முடிவைப் புரிந்துகொண்டு மதிக்கிறோம்.

குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக கஸ்தூரி செல்லராஜா தொடர்ந்து பணியாற்றுவார். 31 மார்ச் 2024 வரை நிர்வாகக் குழுவை வழிநடத்துவார்.” என அறிவித்துள்ளார்.