இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும்; உலக வங்கி அறிவிப்பு

0
206

உலக வங்கி கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மந்தநிலைக்குப் பின்னர் இலங்கை மீள்வதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாகவும் இந்த ஆண்டு 3.8 வீதமாக வீழ்ச்சியடைந்த பின்னர் 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 1.7 வீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்திற்கான அதன் கணிப்புகளை உலக வங்கி திருத்தம் செய்துள்ளது. நாடு பணவீக்கத்தை குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் சுற்றுலா வருமானம் மற்றும் இலங்கை ரூபாயின் உயர்வால் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் ஒரு வீதம் அதிகரிக்கும் என்றும் இந்த ஆண்டு 4.2 வீதம் வீழ்ச்சியடையும் என்றும் கணித்திருந்தது.

கடந்த ஆறு மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் செப்டம்பரில் 1.3 வீதமாக குறைந்துள்ளது. மேலும் ரூபாயின் மதிப்பு சுமார் 12 வீதம் அதிகரித்து அந்நிய செலாவணி கையிருப்பு மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையின் கண்ணோட்டம் இன்னும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையினால் இருப்பதாகவும், பாதகமான அபாயங்கள் இருப்பதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதிக்கான உடன்படிக்கையை இலங்கை மார்ச் மாதம் செய்துகொண்டது.

ஆனால் அரசாங்க வருவாயில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையினால் பிணை எடுப்பின் இரண்டாவது தவணை நிதி தாமதமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கிக்கு மாறாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு இரண்டு வீத வீழ்ச்சியையும் 2024 இல் 3.3 வீத வளர்ச்சியையும் கணித்துள்ளது. எவ்வாறாயினும் 2022 இல் இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.