தமிழ் திரையுலகின் யதார்த்தமான கலைஞன்! நடிகர் ‘முரளி’ நினைவு நாள்

0
163

தமிழ் திரையுலகில் சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகனாக கோலோச்ச முடியும் என்ற நிலை ஒரு சமயம் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை..!

அந்த எழுதப்படாத விதியை முறியடித்து சாதித்தவர்களின் பட்டியலில் ரஜினிகாந்த், விஜயகாந்துக்கு அடுத்து முரளிக்கு தனி இடம் உண்டு.

தனது தனித்துவமான மற்றும் யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதை வென்ற மாபெரும் கலைஞர் அவர். முரளியின் 13வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் 80கள், 90களில் முன்னணி கதாநாயகனாக ரசிகர்களின் மனங்களை வென்றவர் முரளி.

Actor Murali

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 1964-ஆம் ஆண்டு மே 19-ம் தேதி பிறந்தார். 1984-ஆம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரை உலகுக்குள் நுழைந்தவர். 20 வயதில் கன்னட படத்தில் அறிமுகமானாலும் முரளி தமிழில் அறிமுகமானது ‘பூ விலங்கு’ படம் தான்.

முதல் திரைப்படத்திலேயே தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய முரளி, இயக்குனர் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’ வின் கதாநாயகனானார்.

தொடர்ந்து 1990களில் புதுவசந்தம், இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க, ரோஜா மலரே, உன்னுடன் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியங்களில் தனது சிறப்பான நடிப்பு முத்திரையை பதித்தார்.

முரளி கடைசியாக நடித்த படம் ‘பாணா காத்தாடி’. அவருடைய மூத்த மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான திரைப்படம் அது.

தனது இயல்பான நடிப்பால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த முரளி செப்டம்பர் 8, 2010 அன்று தனது 46வது வயதில் காலமானார்.

Murali and Atharvaa