வலைதளத்தில் மோதிக்கொள்ளும் தொழில்நுட்ப தொழிலதிபர்கள் சந்திப்பு..

0
260

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் ஷூமர், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுத்தல் குறித்து கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு சந்திப்பை வாஷிங்டனில் ஏற்பாடு செய்துள்ளார்.

செப்டம்பர் 13ல் நடக்கவிருக்கும் இந்த சந்திப்பில் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் எலான் மஸ்கும், பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளரும் மார்க் ஜூகர்பர்கும் பங்கேற்க உள்ளனர்.

இதுமட்டுமன்றி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர்.

சமூக வலைதளங்களில் வாக்குவாதம்

இதனை உலகின் முதல் கோடீஸ்வரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த 2022ல் விலைக்கு வாங்கினார்.

வாங்கியதும் அதன் பெயரை எக்ஸ் என மாற்றி, லாபத்தைப் பெருக்கும் நோக்கில் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வந்தார்.

எக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக வலைதளத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவனரும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மார்க் ஜூகர்பர்க், கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.

இருவரும் மற்றவரின் சமூக வலைதளங்களின் தரம் குறித்து விமர்சனம் செய்து ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களிலேயே வாக்குவாதம் செய்து வந்தனர்.

இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாட் ஜிபிடி (ChatGPT) எனும் மென்பொருள் செயலியை ஓப்பன்ஏஐ எனும் நிறுவனம் உருவாக்கி கடந்த நவம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. மிகவும் வெற்றியை அடைந்துள்ள இந்த செயலி, செயற்கை நுண்ணறிவை குறித்த ஒரு விவாதத்தையும் தூண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவை மிகவும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான கண்டுபிடிப்பாக ஒரு சாரார் ஆதரித்து வர, மற்றொரு தரப்பினரோ செயற்கை நுண்ணறிவு ஆபத்தானது என்றும் அதன் பயன்பாட்டிற்கான எல்லைகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

நடுநிலையான கருத்துக்கள்

எலான் மஸ்க், ஏஐ பயன்பாடு ஒரு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வாதிட்டு வருகிறார். ஆனால், ஜூகர்பர்க் இது குறித்து நடுநிலையான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார்.

வலைதளத்தில் மோதிக்கொள்ளும் தொழில்நுட்ப தொழிலதிபர்கள் நேரில் சந்திப்பு | Mark Vs Zuck Cage Fight

“கட்டுப்பாடில்லாத தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானது. அது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் கூறியிருந்தார்.

செயற்கை தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பலர் வேலை இழக்கும் அபாயம் தோன்றும் என அச்சம் நிலவுவதாலும், சமூக வலைதளங்களில் எதிரிகளைப் போல் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் மஸ்கும் ஜூகர்பர்கும் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கப் போவதாலும், இந்தச் சந்திப்பு மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.