ருவன்வெலி சாயாவில் இருந்து மாணிக்கக் கற்கள் திருடப்படவில்லை

0
167

புனித ருவன்வெலி மகா சேயாவின் கலசத்தில் இருந்து மாணிக்கக் கற்கள் திருடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியான விசாரணையில் அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று தெரிவித்தார்.

கலசத்தில் இருந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டுள்ளதாக கண்ணுக்குத் தெரியாத சக்தி ஒன்றின் ஊடாக தமக்கு தகவல் கிடைத்ததாக இருவர் சமூக ஊடகங்களில் பொய்யான செய்தியை பரப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தல்துவ தெரிவித்தார்.

அந்த விசாரணையின்படி, புனித ருவன்வெலி மகா சேயாவின் கலசத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என விஞ்ஞான ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நாட்டில் உள்ள பௌத்தர்களால் புனிதமான ருவன்வெளி மகா சேயா மிகவும் போற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதில் ருவன்வெலி சேயாவின் கலசத்தில் சேதம் ஏற்பட்டது, அதனை மீளமைக்க வேண்டியிருந்தது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, பழைய கலசம் புதியதாக மாற்றப்பட்டது.

பழைய கலசத்தை புதியதாக மாற்றியதில் மோசடி நடந்ததாகவும், மோசடி 400 மில்லியன் ரூபாவை தாண்டிவிட்டதாகவும் நபர் ஒருவர் குற்றம் சாட்டியதாக,” பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ருவன்வெலி மகா சேயாவின் தலைமை பீடாதிபதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த இருவரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.

இதன்படி, அனுஜா ஜயசிங்க என்ற குறித்த நபர் ஜூலை 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு மஹர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் அரசாங்கத்தின் பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்று விசாரணைகளை மேற்கொண்டது.

மாணிக்கக் கற்களின் தொன்மைத் தன்மையை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவற்றிற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும் மின்னல் தாக்கியதில் கலசம் சேதமடைந்துள்ளது. பழைய மின்னல் கடத்தியில் குறைபாடு உள்ளதால், அதற்கு பதிலாக தற்காலிகமாக புதிய மின்னல் கடத்தி பொருத்தப்பட்டுள்ளது.

ருவன்வெலி சேயா வளாகத்தில் தனியான இடத்தில் குண்டு துளைக்காத பெட்டியில் பழைய கலசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.