மலைகளில் இடம்பிடிக்க நிர்ப்பந்திக்கப்படும் புத்தர்

0
231

புத்தர் போகங்களை துறந்து ஞானம்பெற்றவர் என்பதுதான் வரலாறு. ஆனால் ஶ்ரீலங்காவைப் பொறுத்த மட்டும் அது விதிவிலக்கு.

ஶ்ரீலங்காவின் சிங்களவர்கள் தாங்கள் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் புத்தருக்கு கொஞ்சம் நிலத்தாசை அதிகம் என்ற போக்கிலேயே செயற்பட்டு வருகிறார்கள் என்ற கருத்து நீண்ட காலமாகவே ஏனைய இனக் குழுமங்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் புத்தருக்கே இவ்வளவு நிலத்தாசை ஊட்டப்படுகிறது என்றால் தங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த நாட்டின் சிங்களவர்கள் எவ்வளவு ஊட்டுவார்கள் என்பதும் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத விடயம்.

நமக்கேன் வம்பு. நாகபாம்பு படமெடுத்து ஆடுகிறதென்று நாக்கிளிப்பாம்புகள் படமெடுத்த கதையாய் இப்போது புத்தரின் நிலத்தாசை மலையாசையாக விகாரப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.

குறிஞ்சிக்குமரன் மலையிருக்கும் இடத்தில்

முன்நாட்களில் நாங்களும் நீங்களும் அறிந்த விடயம் குறிஞ்சிக்குமரன் மலையிருக்கும் இடத்தில் மயில்வாகனன் முருகன் இருப்பான் என்று சொல்லுவதுண்டு. ஆனால் இப்போது நம் ஊர்களில் மலையிருந்தால் புத்தர் வந்துவிடுவார் குண்டு வைத்தாவது தகர்த்துவிடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு நாட்டு நிலைமை மாறிக்கிடக்கிறது.

உண்மைதான் இப்போது மலையிருக்கும் இடமெல்லாம் புத்தர் மண் அளந்து வருகிறாராம். ஒரு காலத்தில் திருகோணமலையில் முட்கம்பி வேலிக்குள் வைத்து புத்தரை காவல் காத்த சிங்கள இராணுவம் இப்போது வெளிப்படையாகவே புத்தரை மலையுச்சியிலும் சந்திகளிலும் வைக்க ஆரம்பித்துவிட்டது. இதில் என்ன சங்கடமென்றால் சாத்வீகமான கருத்துக்களை மனித விழுமியங்களை மனித சமூகத்துக்கு சொன்ன புத்த பகவான் இவர்களால் மழையில் நனைந்து வெயிலில் காயும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்ற வருத்தம் எல்லோருக்குமே இருந்து வருகிறது.

தமிழர்களின் தலைநகரம் திருகோணமலையில்

இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் தமிழர்களின் தலைநகரம் என்கின்ற திருகோணமலையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புடவைக்கட்டு பாலத்திற்கு அண்மையில் உள்ள மலையில் அழகான புத்தபெருமானின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இது அருகில் இருக்கும் இராணுவ முகாமில் இருக்கும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 78 கிராமங்களில் 12900 குடும்பங்களைச் சேர்ந்த 42577 பேர் வசிக்கின்றார்கள். இதில் பௌத்தர்கள் 444 பேரும், இந்துக்கள் 12110 பேரும், இஸ்லாமியர்கள் 27957 பேரும், கிறிஸ்தவர்கள் 2066 பேரும் வசித்து வருகின்றார்கள்.

புத்தரை குடியேற்றும் திட்டம் தான் இப்போது வேலையா

இந்த நிலையில் யாருமற்ற வெளிகளில் புத்தரை குடியமரச் செய்வதற்காகவே ஶ்ரீலங்கா அரசு அதிகளவு ஒதுக்கீட்டில் இராணுவத்தை பராமரிக்கிறதா? ஶ்ரீலங்கா இராணுவத்துக்கு புத்தரை குடியேற்றும் திட்டம் தான் இப்போது வேலையா?

வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்களில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவநிலங்கள் குறித்து தமிழ் மக்கள் படும் மன வேதனைகளிலும் மக்களால் வழங்கப்படும் சாபங்களிலும் புத்தரை மலைகள் தோறும் குடியமர்த்தி தங்கள் பாவங்களில் புத்தருக்கும் பங்கு வழங்குகிறதா ஶ்ரீலங்கா இராணுவம் புத்தருக்கு வாயிருந்தால் தன் பெயரில் நடக்கும் அக்கிரமங்களை நினைத்து இந்த மூடர்களுக்கா இறைவனாய் வாய்த்தேன் என வாய்விட்டு அழுவாரோ என்னமோ புத்தருக்கே இந்த நிலமையென்றால் நமக்கு.