தீவிர உணவுப்பாதுகாப்பின்மை நிலை மேலும் மோசமடையும்!

0
238

உலக உணவுத்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன்விளைவாக உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றது.

அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட உணவுப்பாதுகாப்பு தொடர்பான ஆய்வை அடிப்படையாகக்கொண்டு உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

37 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலை

அவ்வறிக்கையில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையிலுள்ள குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் 37 சதவீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கு முகங்கொடுத்துள்ளன.

தீவிர உணவுப்பாதுகாப்பின்மை நிலை மேலும் மோசமடையும்! ஆய்வில் வெளியான தகவல் | Sri Lanka Food Crisis And Insecurity Crisis

அதன் காரணமாக அக்குடும்பங்கள் உணவு வேளையைத் தவிர்த்தல், உணவு உட்கொள்ளும் அளவைக் குறைத்தல் மற்றும் உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகக் கடன்பெறல் போன்ற பலதரப்பட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சந்தை செயற்திறன் குறிகாட்டியின் பிரகாரம் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச்செல்கின்றன. அதேவேளை மறுபுறம் குறிப்பாக உணவுப்பொருட்களின் நிரம்பல் தொடர்பில் வர்த்தகர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.

உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடி

இதுஇவ்வாறிருக்க தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம் மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 70.6 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது நவம்பர் மாதம் 65 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 3.4 மில்லியன் மக்களுக்கு அவசியமான அவசர உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றோம்.

இவ்வுதவியின் ஊடாக 1.4 மில்லியன் மக்களுக்கு நிதிக்கொடுப்பனவு மூலமான உணவுசார் உதவிகள், ஒரு மில்லியன் மாணவர்களுக்கு அவசியமான பாடசாலை உணவுத்திட்டம் மற்றும் ஒரு மில்லியன் கர்ப்பிணித்தாய்மார்கள், 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அவசியமான போசாக்கு உணவு என்பன வழங்கப்படுகின்றன.

இந்த அவசர உதவி வழங்கல் செயற்திட்டம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனூடாக நன்மையடைந்திருக்கின்றார்கள். அதேபோன்று எமது அமைப்பின் அனுசரணையுடன் தயாரித்து வழங்கப்பட்ட உணவின் மூலம் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்கள் பயனடைந்திருக்கின்றார். மேலும் 268,000 திரிபோஷா பைக்கற்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.