பேஸ்புக்கிற்கு மேலும் ஒரு இழப்பு!

0
823

Jan Koum leaves Facebook

வட்ஸெப் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜேன் கோம், அந்நிறுவனத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்தே அவர் இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்ஸெப்பின் வியாபார தந்திரோபாயங்கள் தொடர்பிலான கருத்து முரண்பாடுகள், மற்றும் அதன் தனிப்பட்ட பயனாளிகள் விபரங்களை பேஸ்புக் நிறுவனம் உபயோகப்படுத்த முயற்சிப்பதாகவும் , அச்செயலியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பேஸ்புக் வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியே அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோம், வட்ஸெப்பை, கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார். சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அவர் விற்பனை செய்திருந்தார்.

இந்நிலையில், தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கை காரணமாக அவர் பதவி விலகுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. இது தொடர்பில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தரவுத் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இத்தகையதொரு நிலையிலேயே கோம், ‘பிரைவஷி’ காரணங்களைக் கூறி விலகவுள்ளமையானது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வட்ஸெப் சேவையானது உலகம் பூராகவும் 1.5 பில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. ஜோன் கோம் மற்றும் , பிரயன் எக்டோன் ஆகிய இருவரும் இணைந்தே வட்ஸெப்பை உருவாக்கினர். அதனை பேஸ்புக்கிடம் விற்பனை செய்த பின்னர் இருவரும், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்தனர்.

எனினும் பிரயன் அண்மையில் அந்நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையிலேயே கோமும் விலகவுள்ளார்.