டான்ஸ் ஆடும் போதே சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம்பெண்; திருமண நிகழ்வில் சோகம்

0
109

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ம.பி. மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பரினிதா ஜெயின் என்ற 23 வயது இளம்பெண் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற தன் உறவினர் சகோதரியின் திருமண விழாவுக்கு சென்றார்.

அங்கு இசைக்கப்பட்ட பாலிவுட் பாலட்களுக்கு பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட ‘ஹல்தி’ விழாவின் போது பரினிதா மேடையில் நடனமாடியதை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடனே விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு CPR செய்ய முயன்றனர்.

எனினும் அவர் சுயநினைவுக்கு வரவில்லை. இதன்பிறகு உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

எம்.பி.ஏ. பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். முன்னதாக பரினிதாவின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.