முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச ஒரே நாளில் மிகப் பிரபலமான நபராக மாறியுள்ளார். நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கூகிள் சமீபத்திய தேடல்களில் விமல் வீரவன்ச 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்றையதினம் கல்வி அமைச்சிற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் பின்னர் விமல் வீரவன்சவின் பெயர் கூகிளில் அதிகமாக தேடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பாரிய சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்படும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் கல்வி மறு சீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விமல் வீரவன்ச குழுவினரால் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணைய இணப்பு ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நாட்டில் கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இதற்கு கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், அமைச்சுப் பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என்றும் அழுத்தம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.

இந்தநிலையில், கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து ஹரிணி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி விமல் தலைமையிலான குழுவினர் நேற்று கல்வி அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததோடு, ”கோ ஹோம் ஹரிணி” என்ற வாசகம் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததோடு, ஹரிணியை வீட்டுக்குச் செல்லுமாறும் கடும் கூச்சலிட்டனர்.
”கோ ஹோம்” என்ற வாசகங்கள் கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றறங்களை ஏற்படுத்தியிருந்த போதிலும், தற்போதைய பிரதமர் ஹரிணிக்கு எதிரான இந்த கூச்சல் போராட்டத்தின் இன்று காலை நிலவரப்படி களத்தில் அதிக கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்துப் போனதாகவே தெரிகின்றது.
இறுதியில் இந்த ”கோ ஹோம்” கூச்சலால் விமல் வீரவன்ச மீண்டுமொருமுறை இலங்கை அரசியலில் மற்றும் இணையத்தில் அதிகம் பேசப்பட்ட மற்றும் தேடப்பட்ட நபராக மாறியிருக்கின்றார் என்பது தான் நிகழ்ந்துள்ள மாற்றமாகும்.




