பிரான்ஸில் நாளை புதன்கிழமை ஆரம்பமாக உள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் தடகள வீரர் சமித துலான் இரண்டாவது முறையாகவும் பதக்கத்தை வெல்வதில் உறுதியாக உள்ளார்.
சமித துலான் தெனியாய பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தெனியாய மத்திய கல்லூரி மற்றும் மாத்தறை ராகுல கல்லூரியில் கற்றுள்ளார்.
துலான் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கியதில் அவரது வலது காலில் ஒரு செயலிழப்பைச் சந்தித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிவரும் அவர் 2017 ஆம் ஆண்டு முதல் பரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த துலான் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேசிய பரா மெய்வல்லுநர் போட்டியின் F44 பிரிவு ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 66.6 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய உலக சாதனை படைத்தார்.
இந்த நிலையிலேயே அவர் தற்போது பரிஸ் பரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் செல்லும் கனவுடன் பங்கேற்றுள்ளதாக கூறியுள்ளார்.