4ம் வகுப்பில் ஏன் அடித்தாய்? 52 ஆண்டுகளுக்கு பின் நண்பனை தாக்கிய முதியவர்கள்!

0
98

இந்தியாவின் கேரளாவின் காசர்கோட்டில் 52 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாடசாலை சண்டையின் பகையை மனதில் வைத்து, இரண்டு முதியவர்கள் தங்கள் முன்னாள் வகுப்புத் தோழரைத் தாக்கியுள்ளனர்.

பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள நடக்கல் எய்டட் யுபி பாடசாலையில் 52 வருடங்கள் முன்பு தங்களுடன் நான்காம் வகுப்பு படித்த வி.ஜே. பாபு (62) என்பவரைத் தாக்கியதாக மாலோத்து பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ வலியபிளாக்கல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 2 ஆம் திகதி மாலோம் நகரில் உள்ள ஜனரங்கன் ஹோட்டல் முன் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பொலிஸ் தகவலின்படி பாலகிருஷ்ணன் பாபுவைத் தரையில் சாய்த்துக்கொண்டபோது மேத்யூ கல்லைப் பயன்படுத்தி அவரது முகத்திலும் உடலிலும் தாக்கியுள்ளார்.

நான்காம் வகுப்பில் பாலகிருஷ்ணனை ஏன் தாக்கினாய் என்று இரு நபர்களும் பாபுவிடம் கேட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாபுவுக்கு இரண்டு பற்கள் உடைந்ததாகவும், கன்னூரில் உள்ள பிரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளரிகுண்டு ஆய்வாளர்  தெரிவித்தார்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நீண்டகாலப் பகையும் மதுபோதையில் இருந்ததும் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று பாபு தெரிவித்துள்ளார்.