சஜித்தின் அமைச்சரவையில் பிரதமர் யார்?: நிதி அமைச்சர் ஹர்ச டி சில்வா

0
106

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அமைக்க உள்ள அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திவருவதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் உறுதிமாக வெற்றிபெறுவோம் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளது.

ஆனால், இம்முறை வெற்றிபெற போகும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உறுதியாக கணிக்க முடியாத சூழ்நிலையே நாட்டில் நிலவுகிறது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார மற்றும் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

அனுரகுமாரவுக்கு வரலாறுகாணாத ஆதரவு நாடு முழுவதும் பரவலாக பெருகியுள்ளது. அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு பெருகியுள்ளது. கடந்த சில நாட்களாக வெளிவரும் கருத்துக் கணிப்புகளில் ரணில் விக்ரமசிங்க முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

என்றாலும், உறுதியாக ஐக்கிய மக்கள் சக்தி இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச நம்புகிறார். அதனால் வெற்றியின் பின் அமையவுள்ள அமைச்சரவை தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.

சஜித்தின் அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு பிரதமர் பதவி வழங்க ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.

நிதி அமைச்சை ஹர்ச டி சில்வாவுக்கும், பொருளாதார விடயங்களை தொடர்பான அமைச்சுகளை கபீர் மற்றும் எரான் விக்ரமரத்னவுக்கும், கல்வி அமைச்சை டளஸ் அழகப்பெருமவுக்கும், நகர அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அமைச்சை சம்பிக்கவுக்கும், பெருந்தொருக்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சை லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் வழங்க ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

என்றாலும், இந்த கலந்துரையாடல்கள் இன்னமும் இறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன் தேர்தல் நெருங்கும் வேளையில் இறுதிகட்ட இணக்கப்பாடுகளை எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.