எதிர்க்கட்சியில் இருக்கும்போது சண்டியர்களாக செயற்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு வந்ததும் நொண்டியர்களாக மாறிவிட்டனர் என புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
நேற்று (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வெனிசியூலா பிரச்சினை 2018ஆம் ஆண்டு காலத்தில் வந்தபோது தற்போதைய அரசாங்கத்தில் இருப்பவர்கள் அப்போது அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் சென்று சுற்றிவளைத்தனர்.
ஆனால் இப்போது அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் சென்று இவர்களின் வேறு தரப்பினரே சுற்றி வளைத்தனர். இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது சண்டியர்களாகவும் அரசாங்கத்தில் இருக்கும்போது நொண்டியர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்களால் இப்போது எதுவும் பேசமுடியாமல் இருக்கின்றனர். இதேவேளை கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் நாங்கள் பிரதமரை அவமதிக்கும் வகையில் எதனையும் கூறப் போவதில்லை.
இந்த பிரச்சினையில் தவறு எங்கே நடந்துள்ளது என்பதல்ல விடயம். கெஹேலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய மருந்து ஊசிகளை இறக்குமதி செய்திருந்தாலும் அவற்றை நோயாளர்களுக்கு செலுத்தியவர் அவரல்ல.
ஆனால் சிறைக்கு அவரே சென்றார். அதேபோன்றுதான் பிரதமருக்கும் இதில் பொறுப்புக் கூறுவதிலிருந்து தப்பிக்க முடியாது. நான் சிறைக்குச் சென்ற விடயத்திலும் அதிகாரிகளே வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றனர்.
நான் பணம் பெறவில்லை. ஆனால், இறுதியில் சிறைக்குச் சென்றது நானே. அது போன்றுதான் பிரதமருக்கு இதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. நிச்சயமாக, கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் சாமர சம்பத்துக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் போன்று பிரதமருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், அவர் பதவி விலக வேண்டும்.
அதேபோன்று, பொலிஸார் பற்றி கூறும்போது முன்னாள் சபாநாயகர் மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கஞ்சா கைப்பற்றச் சென்ற பொலிஸ் அதிகாரியொருவருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.
இதேவேளை, இப்போது ஊடக நிறுவனங்கள் மீது கைவைக்க முயற்சிக்கின்றனர். மேர்வின் சில்வா ஊடகங்கள் மீது கைவைக்கப்போய் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே? இந்த அரசாங்கம் மரங்கொத்தி பறவை போன்று எல்லா மரங்களிலும் கொத்தி வாழைமரத்தில் கொத்தி சிக்கிக்கொண்டது போன்றுதான் ஊடகங்கள் மீது அரசாங்கம் கைவைத்தால் நடக்கும்.
அதனால், ஊடகத்தின் மீது கைவைப்பதை நிறுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். தற்போது மண்சரிவு நிலைமையின் பின்னர் ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்புக்கான ரயில் சேவைகளுக்கு என்ன நடந்தது?இன்னும் அதனை வழமைக்கு கொண்டுவர முடியவில்லை.
மஹவ வரையிலேயே அந்த சேவை நடக்கின்றது. அதேபோன்று அனர்த்த நிலைமைகளின் பின்னர் மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட நஷ்டஈடுகள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்புகளால் மக்கள் அதனை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர். முறையாக இது தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.



