சஜித் அணியின் முக்கிய உறுப்பினர்கள் ரணிலுடன் இணைய காரணம் என்ன?: அலி சப்ரி விளக்கம்

0
125

தேர்தலை வெல்வது மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டை கொண்டுச் செல்லும் தலைமைத்துவத்துடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித, தலதா, பௌசி, குமார வெல்கம போன்றவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் மேடையில் ஏறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று (13.09) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சஜித் பிரேமதாசவை அழைத்து ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருந்தபோதும் அவர் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.சொந்த நலனை கருதி நாட்டை நெருக்கடியில் விட்டுவிட்டு ஓடிச் சென்றவர்கள் இப்போது எதற்காக ஆட்சியை கோருகிறார்கள்.

யுத்தத்தின் போது பயன்படாத வாள் யுத்தம் முடிந்த பின்பு எதற்காக வேண்டும் என்பது போல் தான் சஜித் அணியின் நிலைமை இருக்கிறது.

அன்று அல்லல்பட்ட நாடு இன்று சரியான திசையில் பயணிக்கிறது. பொதுஜன பெரமுனவிலிருந்தவர்களே இன்று ஜனாதிபதியுடன் இருக்கிறனர். எனவே நாட்டை கட்டியெழுப்பிய பின்னர் அரசியல் செய்ய முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச வருமானத்தை சரியாக முகாமைத்துவம் செய்து அதனை மூன்று மடங்காக அதிகரித்து கொள்ள வழி செய்திருக்கிறார்.

பொருளாதார யுத்தத்திலிருந்து நாட்டை மீட்ட ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உருவாகியுள்ளது. அதனால் இந்த தேர்தல் இனவாதம் பேசப்படாத தேர்தலாக அமைந்திருக்கிறது.” என்றார்.