எரிகின்ற விளக்கு அனைகின்றபோது சுடர்விட்டுதான் இறுதியாக அனையும். கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதுதான் நடந்தது. ஜனாதிபதி ரணிலுக்கும் இதுதான் நேரப் போகின்றது என இலங்கை ஆசிரியர் சேவை சங்க தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் குரல்களை நசுக்கி கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் இறுதிகாலம் நெருங்கிவிட்டது. தேசபந்து அல்ல எந்த பந்தை விளையாடினாலும் மக்களின் குரலை அடக்கமுடியாது என அவர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சேவை சங்க தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப்,
இந்த வரவு – செலவு திட்டம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், ரணில் ராஜபக்சவின் இந்த வரவு – செலவுத் திட்டமானது புஸ்பவானம் போல் உள்ளது. மக்களுடைய பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்காது வரியை அறவீடு செய்கின்ற வரவு – செலவு திட்டமாகவே உள்ளது.
உலக நாடுகளில் கல்விக்காக ஆறு வீதம் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிலையில் இலங்கையில் ஒரு வீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்படுகின்றது.
நமது நாட்டில் இலவச கல்வி, மருத்துவம் இருக்கின்றது. ஆனால், பாடசாலையில் மின்சாரம், குடிநீர், தொலைபேசி கட்டணங்களை மாணவர்களிடம் இருந்து அறவிட்டு கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலையை நிர்வாகம் செய்யும் தகுதியில் இருந்து அரசாங்கம் தனியார் மயப்படுத்தலுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
தமக்கு தேவையானவர்களுக்கு அமைச்சு பதவியை வழங்குகின்றார்கள். அவர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்கின்றனர்.
ஆனால் நாட்டின் கண்ணாக இருக்கக் கூடிய கல்வித் துறையில் இருக்கின்ற ஆசிரியர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை. இதனால் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நாட்டின் கல்வியை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லவேண்டுமாயின் அந்தக் கல்வியை போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
கல்வியை தனியார் மயப்படுத்தலுக்கான சட்டதிட்டங்களையும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான சட்டதிட்டங்களை கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.
பாடசாலையின் பொறுப்பு பெற்றோரிடம் திணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாணவர்களுக்கு புத்தகப்பையை கூட வாங்கமுடியாத நிலையில் பெற்றோர் உள்ளனர்.
மக்கள் பொருளாதார ரீதியில் பாதிகப்பட்டுள்ள நிலையில், அதனை சமூகவலைத் தளங்களில் வெளிப்படுத்தும் போது அதனை ரணில் ராஜபக்ச அரசாங்கம் தடைசெய்ய சட்டங்களை கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களின் குரல்களை நசுக்கி கொண்டிருக்கின்றார். உங்கள் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பி மக்களை நேசிக்கின்ற அரசாங்கத்தை அமைத்து பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.