கைது பயத்தைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது: நாமல் சூளுரை

0
20

கைது செய்யப்படுவீர்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அந்த விடயம் ஒருபோதும் நடக்காது என சூளுரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”இந்நாட்டின் சுயாதீன நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே எமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை சட்டத்தின் பிரகாரம் எதிர்கொள்வோம். குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நிரூபிப்போம்.

அச்சுறுத்தல் மூலம் எதிரணிகளை மௌனிக்க வைக்கலாம் என அரசாங்கம் நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. அரசாங்கம் தவறிழைந்தால் அதனை தொடர்ந்து துணிவுடன் சுட்டிக்காட்டுவோம்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.