விநாயகர் பூஜையில் வைக்கப்பட்ட லட்டு ரூ.1½ லட்சத்துக்கு ஏலம்!

0
107

கடந்த சனிக்கிழமை (7) ஆவணி சதுர்த்தி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை யொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

இதன்போது விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடந்தன. நேற்று இந்த சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர். முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த மூக்கன் (வயது 45) என்பவர் ஒரு லட்டை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.

இதனால் ஆச்சரியம் அடைந்த கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும் இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். அதேவேளை விநாயகரின் லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம்.

அதேவேளை கடலூரில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் 72 கிலோ எடை கொண்ட லட்டு பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்ட சம்பவமும் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.

30 கிலோ கடலை மாவு, 35 கிலோ சர்க்கரை, 20 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை, கால் கிலோ ஏலக்காய் ஆகிய பொருள்களை பயன்படுத்தி லட்டு பிள்ளையாரை உருவாக்கிய அந்த லட்டு 3 நாள்களுக்கு பிறகு லட்டு பிள்ளையார் பொது மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என அதனை தயாரித்தவர்கள் கூறியுள்ளார்களாம்.