சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்: திருச்சியில் புதிய விமான நிலைய முனைய திறப்பு விழாவில் மோடி புகழாரம்

0
255

திருச்சியில் ரூ.1,112 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

திருச்சி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்களும் பங்கேற்றனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, ”இந்த 2024 புத்தாண்டின் எனது முதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். தற்போது, கொண்டு வரப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி அடைவதுடன், ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

கடந்த ஆண்டு இறுதியில் கனமழை, வெள்ளத்தால் அதிக வலிகளை அனுபவித்துவிட்டோம். உயிரிழப்புகளாலும், சொத்துகளை இழந்தும் பரிதவித்த குடும்பங்கள் ஏராளம். இதுபோன்ற நிகழ்வுகள் எனக்குள் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.

Oruvan

இந்த நெருக்கடியான நிலையில், தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணையாக உள்ளது. அனைத்து ஆதரவையும் மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் பிறந்த சர்.சி.வி.ராமன் போன்ற அறிஞர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் அளப்பரியதாக இருந்தது.

திருவள்ளுவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புத இலக்கியங்களை படைத்துள்ளனர். நான் தமிழகம் வரும்போதெல்லாம் எனக்கு புதிய சக்தி, உத்வேகம் கிடைக்கிறது. உலகில் எங்கு பேசினாலும், தமிழ்நாடு, தமிழ் மொழியின் பெருமையை பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை.

உலகின் 5ஆவது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப்பெரிய முதலீடு கிடைக்கும். இந்தியாவின் நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரித்துள்ளதன் நேரடி பயன் தமிழகத்துக்கு கிடைத்து வருகிறது. இதன்மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தின் தூதராக தமிழகம் மாறி வருகிறது.

மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை. திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டினர் வருகை உயரும். தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை,ராமேசுவரம், வேலூர் ஆகிய நகரங்கள் ரயில் பாதை மூலம் இணைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சாலை கட்டமைப்பு வசதிகளால் வணிகம், சுற்றுலா வளர்ச்சி பெருகும். துறைமுக கட்டமைப்புகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாகர் மாலா திட்டத்தால் துறைமுகங்களை சிறந்த சாலைகள் மூலம் இணைத்துள்ளோம்.

2014க்கு முன்பு கொடுத்த நிதியைவிட இரண்டரை மடங்கு, சாலைகளுக்கும் 3 மடங்கு ரயில்வே துறைக்கும் இரண்டரை மடங்கு என அதிக நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 இலட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழக இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் இருக்கும் உற்சாகம்தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு நம்பிக்கையாக மாறும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

‘கேப்டன்’ விஜயகாந்துக்கு புகழஞ்சலி

திருச்சியில் நடைபெற்ற விழாவில், மறைந்த நகடிரும் அரசியல்வாதியுமான விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அவர் பேசியபோது, ‘‘சில நாட்களுக்கு முன்பு, விஜயகாந்தை இழந்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமன்றி, அரசியலிலும் அவர் கேப்டனாக இருந்திருக்கிறார்.

சினிமா நடிப்பின் மூலமாகவும், தனது தனிப்பட்ட செயல்பாடுகள் மூலமாகவும் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் விஜயகாந்த். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தார். அவருக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். இதேபோல, வேளாண் விஞ்ஞானியும், உணவு பாதுகாப்பு திட்டத்தை தன்னகத்தே கொண்டிருந்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது’’ என்று குறிப்பிட்டார்.