அமெரிக்காவின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாகி உள்ளது.
தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் மாஸ்க் அணிந்த மர்மநபர்கள் ‛ஆப்பிள்’ ஷோரூமிற்குள் நுழைந்து பொருட்களை அள்ளி சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
அமெரிக்க குடியேற்றத்துக்கான கடும் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டுகள் மூலம் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த போராட்டக்காரர்கள் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமிற்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அள்ளி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கண்ணாடி கதவுகளை உடைத்து ஆப்பிள் ஷோரூமிற்குள் நுழைந்த நபர்கள் அங்கிருந்த செல்போன், லேப்டாப் உள்பட ஏராளமான பொருட்களை அள்ளி சென்றனர்.