வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03.2024) சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகள் நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தனது X தளத்தில் இலங்கை அரசு தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் வழிபட்ட தமிழர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளது இனவெறியின் உச்சம்! எனத் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரி வழிபாடுகள்
மேலும் இதுகுறித்து சிவராத்திரி வழிபாடுகளில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழர்களைத் தடுத்து அவர்கள் மீது இலங்கை இனவாத அரசின் பொலிஸார் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஈழத்தில் 2 இலட்சம் அப்பாவி தமிழர்களைத் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்து முடித்த பிறகும் தமிழர்கள் மீதான வன்மமும், இனத்துவேசமும் துளியும் அடங்காது இன அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது.
அன் நீட்சியாக, தமிழர் அடையாளச் சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழர் பண்பாட்டு விழுமியங்களையும், தொன்மச்சான்றுகளையும் மெல்ல மெல்ல அழிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சிங்கள இனவாத அரசு.

யாழ் பல்கலைக்கழக விவகாரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தைத் தகர்த்தது, தமிழர் வழிப்பாட்டுத்தலங்களை இடித்து பௌத்த விகார்களை நிறுவி வருவது தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களைச் சிதைப்பது என தமிழர்கள் வாழ்விடங்கள் என்பதற்கான அடையாளங்கள் யாவற்றையும் முற்றாக அழிப்பதும், தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறித்து சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர் பகுதிகளை இராணுவத்தின் துணையோடு சிங்களமயமாக்குவது இனப்படுகொலைப் போருக்கு பிந்தைய கடந்த 14 ஆண்டுக் காலக்கட்டத்தில் தொடர்ச்சியாக இத்தகைய கொடுமைகளை அரசாங்கம் செய்து வருகிறது.

பாஜக அரசு
அருகாமையிலிருக்கும் ஒரு நாட்டில் இத்தகைய இனவெறிக்கொடுமைகளும், பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும்போதும் இந்தியாவை ஆளக்கூடிய பாஜக அரசு அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாது அமைதிகாப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கும் பச்சைத்துரோகமாகும் எனவும் விமர்சித்துள்ளார்.
ஆகவே வழிபாட்டு உரிமையையும், வாழ்வதற்கான உரிமையையும் மறுத்து தமிழ் மக்களை அழித்தொழிக்கும் இலங்கையின் இனவாதக் கொடுமைகளை ஐ.நா. மன்றம் உள்ளிட்ட அமைதியை விரும்பும் பன்னாட்டு அமைப்புகள் உடனடியாகக் கண்டிப்பதோடு தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வான ஈழத்தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்த முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.



