அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம கும்பல்

0
77

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூம் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

அதன்படி, தபால் மூல வாக்களிக்கும் நடைமுறைகளின் படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. ஜனாதிபதி ஜோ பைடனும் தனது வாக்கை செலுத்தினார்.

இவ்வாறிருக்க ஒரேகான் மாகாணத்திலுள்ள போர்ட்லாண்ட் பகுதியிலுள்ள இரண்டு வாக்குப் பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வொஷிங்டன் மாகாணத்திலுள்ள வான்கூவர் பகுதியிலும் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை தீயை அணைத்தபோதிலும் உள்ளிருந்த வாக்குச் சீட்டுகள் தீயில் கருகி சேதமடைந்தன.

சிறிதளவு வாக்குச் சீட்டுக்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இரண்டு இடங்களில் ஒரே மாதிரியாக வாக்குச் சீட்டுக்கள் எரிக்கப்பட்ட இச் சம்பவத்தை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மக்களால் செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களை செய்தவர்கள் நிச்சயமாக தண்டனைக்குரிய குற்றவாளிகள் மற்றும் இச் செயல்கள் கண்டிக்கத்தக்கது எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வேட்பாளர்களுக்கு எதிராக பல குற்றச் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. தற்போது வாக்குப் பெட்டிகள் எரிக்கப்பட்டுள்ள சம்பவமானது தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.