1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த போதிலும் தனது தளராத உறுதியால் உலகையே கவர்ந்த இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் ரணதுங்க ஜே.கே. கருணானந்தவின் கதை இன்றும் ஜப்பானிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.
இதனை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தூதுவர் அகியோ இசொமாடா, கருணானந்தவின் விடாமுயற்சி மற்றும் மனதிடம் குறித்த செய்தி இன்றும் ஜப்பானிய மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

1970களில் ஜப்பானிய ஆரம்பப் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற இந்தக் கதை தற்போது உயர்நிலைப் பாடசாலை ஆங்கிலக் கல்விப் புத்தகங்களிளும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 67ஆம் இலக்க சீருடையுடன் பங்கேற்ற கருணானந்த கடுமையான சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தனது நாட்டுக்காகப் பந்தயத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏனைய வீரர்கள் ஓடி முடித்த பின்னரும் தனி ஆளாக மூன்று சுற்றுகள் ஓடினார். ஆரம்பத்தில் இதைக் கண்டு வியந்த 70,000 பார்வையாளர்கள், பின்னர் அவரது அர்ப்பணிப்பைக் கண்டு எழுந்து நின்று கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.
நான் இந்தப் போட்டியில் வெற்றி பெறவில்லை ஆனால் ஒருபோதும் பாதியில் கைவிடவில்லை என்று ஒருநாள் எனது மகளிடம் கூறுவேன் எனப் போட்டியின் பின் கருணானந்த நெகிழ்ச்சியுடன் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



