ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச. இணைந்து செயற்பட வேண்டும் – அகிலவிராஜ் காரியவசம்

0
22

‘ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு தரப்பினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும். அதனால் இந்த இணைப்பு விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று (31) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,’ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் இரண்டு கட்சியினரும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு இணைந்து செயற்படும்போது அந்த நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான கலந்துரையாடல்களே தற்போது இடம்பெறுகின்றன.

இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்றிருக்கின்றன. அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளின்போது பல முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். இரண்டு கட்சிகளும் இணைந்து நாட்டின் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்ல சேவையை வழங்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

தலைமைத்துவம் தொடர்பில் நாங்கள் யாரும் தற்போது அதுதொடர்பில் கதைக்கவில்லை. அது எங்களுக்கு தற்போது பிரச்சினையாக தெரியவில்லை. எதிர்காலத்தில் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ளலாம் என நம்புகிறோம்.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி நடத்தும் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்து கொள்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அது தொடர்பில் இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை.

நாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதால், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும். எமது பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் அனைத்து கட்சிகளுக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அதில் பிரச்சினை இல்லை.

என்றாலும் இன்னும் காலம் இருப்பதால், தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்காத கட்சிகள் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் இருக்கிறது’ என்றார்.