யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு முழுமையான ஆதரவு ; ஐநா உறுதி

0
21

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தடயவியல் பிரிவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிராஞ்ச் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிப் பணிகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது தடயவியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் செல்லையா பிரணவனுடன் தாம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாக ஐநா விதிவிட ஒருங்கிணைப்பாளர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இடைநிறுத்தப்பட்டிருந்த செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் மனிதப்புதைகுழிகளை அகழ்வு செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச நடைமுறைகள் மற்றும் அதற்காகத் தேவைப்படும் வளங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த அகழ்வுப் பணிகள் மிகவும் வெளிப்படையான முறையிலும், சுயாதீனமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முக்கியமான பணிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தயாராக உள்ளது எனவும் இது குறித்து மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.