மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை திரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் எழுந்தது. இது தொடர்பில் போலீசார் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரியதால் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என திரிஷா சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் தனது முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை திரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதி, எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்கிறீர்களா? என மன்சூர் அலிகான் தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.
திரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர்அலிகான் மன்னிப்பு கேட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்ததாகவும் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக இருக்கும்போது எதற்காக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த மனுவுக்கு நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை வரும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.