மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மூன்று அமைச்சர்கள் அழைப்பு

0
364

பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி விசாரணைக்கு தேவையான வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்பட உள்ளது.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த மே மாதம் 09ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணைக்காக உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பலரும் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.