30 வருட யுத்தத்தை ஆரம்பித்தவர்களே நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும்: ஜே.வி.பி வீடுகளுக்கு தீ வைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சி – நாமல் ராஜபக்ஷ

0
167

நாட்டின் 75 வருடகால சாபம் பற்றி பேசுவோர் மட்டுமல்ல 88-89 ஆம் ஆண்டுகளில் இளைஞர்களை கொலை செய்தவர்கள் 30 ஆண்டு போரை ஆரம்பித்த சகலரும் நாட்டின் நிலைமைக்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

83 கலவரத்தில் சொத்துக்களை அழித்து மக்களை கொன்றனர்

ஜே.வி.பியினர் தமது முயற்சி தோல்வியடைந்து விட்டது என்று புரிந்த பின்னர் ஆட்களை ஒன்றுக்கூட்டி மேடைகளில் ஏறி கத்துகின்றனர்.

இந்த நாட்டின் 75 ஆண்டு கால சாபம் பற்றி கூற வேண்டுமாயின், 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் சொத்துக்களுக்கு தீவைத்து, மக்களை கொன்று, 30 ஆண்டு கால போரை ஆரம்பித்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். அத்துடன் 1988-89 ஆம் ஆண்டுகளில் 60 ஆயிரம் இளைஞர்,யுவதிகளை கொலை செய்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

மேலும் பேருந்துகளுக்கு தீ வைத்தவர்கள்,மின்மாற்றிகளை தகர்த்தவர்கள் மற்றும் கடந்த போராட்டத்தின் போது வீடுகளுக்கு தீ மூட்டி,நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத்துறையையும் வீழ்த்தியவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜே.வி.பி அந்த நேரத்தில் காலிமுத்திடலையும் நிரப்பியது. ஜே.வி.பியினர் அரசியல் ரீதியாக மக்களை திரட்டி தமது கொள்கைகள் பற்றி பேசினால் பரவாயில்லை. அது நல்லது.

ஜே.வி.பி வீடுகளுக்கு தீவைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தது.

போராட்டம் நடைபெற்ற காலத்தில் வீடுகளுக்கு தீவைத்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஜே.வி.பி முயற்சித்ததை நாம் பார்த்தோம்.

வீடுகளை தீ வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சித்து தோல்வியடைந்துள்ளது என்பதை புரிந்துக்கொண்டுள்ளதால், மக்களை ஒன்று திரட்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இதன் காரணமாகவே ஜே.வி.பியின் தலைவர்கள் இந்தியாவுக்கு சென்றிருக்க வேண்டும். ஜே.வி.பியினர் மேடைகளில் எங்கள் மீது பொய்யான குற்றச்சாடடுக்களை முன்வைத்து விமர்சித்து, சேறுபூசாது, அவர்களின் கொள்கை என்ன என்பதை முன்வைத்தால் நல்லது என நாமல் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.