இனவாதத்தை தூண்டியவர்களுக்கு தண்டிக்கப்பட வேண்டும் – அனுரகுமார திஸாநாயக்க

0
357

இனவாதத்தை தூண்டியதன் மூலம் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற முப்படையினர் ஒன்றியத்தின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கில் புலிகள் மீண்டும் எழுச்சி பெற்று வருகின்றனர். இப்படியான கதைகள், 2015,2016, 2017 ஆண்டுகளில் பேசப்பட்டன. அதன் பின்னர் அப்படியான கதைகள் பேசப்படவில்லை.

இதற்கு பதிலாக முஸ்லிம் அடிப்படைவாதம் வளர்ச்சியடைந்து வருவதை கண்டனர். அப்போது அதனை போஷித்து வளர்க்க ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் வடக்கில் ஆயுதங்கள், குண்டு வெடிப்புகள்,ஆவா குழு போன்றவை களத்திற்கு வரவில்லை. முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றிய பரப்புரைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

சிங்கள மக்களின் ஜன பெருக்கத்தை குறைக்கும் கருத்தடை உடைகள், கருத்தடை கொத்து ரொட்டிகள், கருத்தடை மருத்துவர்களை சமூகமயப்படுத்த ஊடகங்கள் ஆரம்பித்தன.

ஊடகங்கள் ஆடைகளை எடுத்து வந்து சிங்கள மக்களுக்கு கருத்தடை செய்ய பயன்படுத்துகின்றனர் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தன.

2050 ஆம் ஆண்டில் சிங்கள மக்களின் எண்ணிக்கை குறைந்து முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று புள்ளிவிபரங்களை தயாரித்து முன்வைத்தனர்.

மருத்துவர்கள் பலோப்பியன் குழாயை முறுக்குவதன் மூலம் பெண்களுக்கு குழந்தைகள் பிறப்பதை தடுக்க முடியும் என விஞ்ஞான ஆசிரியர்களும் கூறினர்.

முஸ்லிம் அடிப்படைவாதிகளால் இனத்திற்கு மிகப் பெரிய ஆபத்து இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தனர்.

பௌத்த பிக்குகள் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிராக தெற்கில் கதைத்தனர். வடக்கிற்கு சென்று தமிழ் மக்களை ஒன்றிணைப்பது பற்றி பேசினர்.

2018 ஆம் ஆண்டு காலத்தில் இந்த கதைகள் களத்தில் பேசப்பட்டன. அதன் இறுதி பிரதிபலனே ஈஸ்டர் தின தாக்குதல்.

தாக்குதலுடன் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு தொடர்பு இருக்கின்றது என்பது உண்மை.

அவர்கள் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தாம் வணங்கும் கடவுளுக்காக மரணிக்க தயாராக இருக்கும் குழு என பிள்ளையான் கூறியதாக அவரது செயலாளர் தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதிகளை இவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். இதில் பலத்த சந்தேகம் இருப்பதாக நாங்களும் அன்று கூறினோம். நாம் கூறியது சர்வதேசத்தில் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

சில விடயங்களை செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. ஒரு விடயத்தை பிள்ளையானின் இணைப்பு செயலாளர் வெளியிட்டார்.

இதனை வெளியிட்ட பின்னர், செனல் 4 தொலைக்காட்சிக்கு ராஜபக்சவினருடன் பரம்பரை பகை இருப்பதாக நாமல் ராஜபக்ச கூறினார். செனல் 4 தொலைக்காட்சிக்கு இவர்களுடன் காணி பிரச்சினையா இருக்கின்றது?.

புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச ஒன்றியம், பென்டோரா ஆவணங்களை வெளியிட்டது.

நிருபமா ராஜபக்சவின் பணம் இருப்பதாக கூறினர். புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச ஒன்றியத்திற்கும் ராஜபக்சவினருக்கும் இடையில் பகை இருக்கின்றதா?.

சீன நிறுவனங்களிடம் இருந்து மகிந்த ராஜபக்ச 7.6 மில்லியன் டொலர்களை இலஞ்சமாக பெற்றதாக நியூயோர்க் டைம்ஸ் முழு பக்க செய்தியை வெளியிட்டது.

அந்த பத்திரிகை ராஜபக்ச குடும்பத்தினருடன் பரம்பரை பகை ஏதும் இருக்கின்றதா?. இவ்வாறான செய்திகள் வெளியாகும் போது அரசாங்கம் விசாரணைகளை நடத்தி அறிக்கையை வெளியிட வேண்டும்.

பிள்ளையான் உள்ளிட்ட குழுவினருக்கு நீண்டகாலமாக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக தலா 35 லட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படுகிறதா என்பதை அறிய விரும்புகிறோம்.

பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் இருக்கும் போது தாக்குதலை திட்டமிட்டவர்கள் சிறையில் இருந்துள்ளனர். பிள்ளையானின் இணைப்புச் செயலாளர் இது சம்பந்தமாக தெளிவான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

இவை சந்தேகத்திற்குரிய விடயங்கள் இல்லையா?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கட்டாயம் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.