இலங்கையில் இரு தேசங்கள் இருப்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஊடகப் பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழில் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (12-02-2023) பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

சிங்கள தேசத்தின் அபிலாசைகள் வேறாகவும் தமிழ் தேசத்தின் அபிலாசைகள் வேறாகவும் காணப்படுவதென்பது அரச முகவர்களால் வெளிப்படுத்தப்படுவதாக க.சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் வீதிகளுக்கு இறங்கிய பிக்குகள் பொலிஸாரை தாக்கியபோது பிக்குகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆனால் சட்டத்தை மதித்து ஜனநாய முறையில் போராடிய தம்மை காட்டுமிராண்டித்தனமாக அடித்து இழுத்து பொலிஸார் கைது செய்திருந்ததாக க.சுகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையை பார்க்கும் போது பொலிஸார் இலக்கு வைத்து திட்டமிட்டே இந்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தாக க.சுகாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே இதற்கு எதிராக சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக க.சுகாஸ் குறிப்பிட்டுள்ளார்.