வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞன் இருவரின் உயிரை காப்பாற்றி தனது மண்ணுலக வாழ்வை முடித்துக் கொண்டமை பலர் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவை சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரண் (வயது 27) என்ற இளைஞன் விபத்தில் சிக்கிய நிலையில் கடந்த 08ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது மூளையின் செயற்பாடுகள் படிப்படியாக குறைவடைந்து மூளைச்சாவை அடைந்தார்.
அது தொடர்பில் இளைஞனின் பெற்றோருக்கு வைத்தியர்கள் அறிவித்ததை அடுத்து, குடும்பத்தினர் இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.
அதனை அடுத்து இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு நேற்று (12) வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மூலம் அகற்றி அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. அதேவேளை உயிரிழந்த ராஜ்கரனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது.




