சீனா கட்டிய உலகின் மிக உயரமான பாலம்

0
32

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது.

உலகின் முதல் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேல் சீனாவில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் தான் உள்ளது. இந்நிலையில் தற்போது குய்ஷோ மாகாணத்தில் புதிய பாலம் ஒன்றைக் கட்டி முடித்துள்ளது சீனா.

இதன்மூலம் உலகின் உயரமான பாலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தப் பாலம். குய்ஷோ மாகாணத்தில் அதிக மலைப்பகுதிகள் நிறைந்துள்ளன. இதனால் இங்கு பாலம் மிகவும் அவசியமாகும். ஏற்கனவே உலகின் உயரமான பாலம் குய்ஷோ மாகாணத்தில் தான் அமைந்திருந்தது.

இந்நிலையில் இதே மாகாணத்திலேயே ‘ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்’ என்ற பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவின் தென்மேற்குப் பகுதியில் இருக்கும் குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்’ என்ற பாலம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கட்டமைப்புகள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் முடிவடைந்தன. ஆற்றின் மேற்பரப்பில் இருந்து சுமார் 2,051 அடி உயரத்திலும், இரண்டு பெரிய மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்திலும் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த இரண்டு மலைகளைக் கடக்க பொதுமக்களுக்கு இரண்டு மணி நேரம் தேவைப்படட்து. ஆனால் பாலம் கட்டப்பட்ட பிறகு, பயண நேரம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்து விட்டது. இது சீனாவின் கட்டுமானத் துறைக்கு மிகப்பெரிய சான்று என போக்குவரத்து துறை தலைவரான ஜாங் யின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வரை மிக உயரமான பாலமாக 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்ட பெய்பன்ஜியாங் பாலம் தான் இருந்தது. தற்போது இதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் பாலம்.

சீனாவின் மலைப்பாங்கான மாகாணமாக குய்ஷோ மாகாணம் இருக்கிறது. இதனால் ஏற்கனவே இங்கு 1,000-க்கும் மேற்பட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது உலகின் மிக உயரமான பாலமும் இங்கு தான் அமைந்துள்ளது. இந்நிலையில் உலகின் முதல் இரண்டு உயரமான பாலங்களைக் கொண்ட மாகாணமாக குய்ஷோ விளங்குகிறது.