உலகம் மாறிவிட்டது: பழமைவாதத்தை பின்பற்றும் அனுர, சஜித் – பிரசன்ன ரணதுங்க

0
122

“உலகம் நவீனமயமடைந்துவிட்டது. அதற்கு ஏற்ப எமது பொருளாதார கொள்கைகள் நவீனமயப்பட வேண்டும். ஆனால் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திஸாநாயக்கவும் பழமைவாதத்தை முன்வைக்கின்றனர்.”

இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (prasanna ranatunga) குற்றம் சுமத்தியுள்ளார். உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர்,

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான ஒரு வாழ்க்கையை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணிக்கும் இந்த கடினமான பொருளாதார பாதையில் இன்னும் சிறிது தூரத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பொருளாதாரப் போக்கை மாற்றினால், கடந்த காலத்தை விட அதிகமான நெருக்கடிகளை நாம் சந்திக்க நேரிடும்.

எமது நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சஜித் மற்றும் அனுரவுக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். இருவருமே கதைப்பதில் வல்லவர்கள். இந்த சவாலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.

சஜித் மாத்திரம் மிகவும் யோசித்து அந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் அவர் ஜனாதிபதி வேட்பாளராக இந்த விவாதத்திற்கு வருவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனுரவிடமிருந்து இன்னும் எந்த பதிலும் இல்லை.

நமக்குத் தெரிந்த பழைய ஜே.வி.பியினர் இப்படி இல்லை. ஒரு சவால் வரும்போது ஓடி வந்து அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இப்போதைய ஜே.வி.பியினர் துணிச்சலான முதுகெலும்பு உள்ளவர்கள் இல்லை. அவர்களால் தற்பெருமை காட்டத்தான் முடியும்.

சஜித், அனுர போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது சாமானிய மக்களுக்கு உணவு உண்ண முடியாத நிலையே ஏற்படும். அனுரவும் சஜித்தும் பழமைவாதத்தை பின்பற்றுபவர்கள்.

அதனால்தான் அனுரவின் அரசாங்கத்தின் நிதியமைச்சராக நியமிக்கப்படுபவராக கூறும் சுனில் ஹந்துன்நெத்தி எலோன் மாஸ்க்கை பொருளாதாரக் கொலையாளி என கூறுகிறார். உலகமே தெரியாத இந்த நபர்களை வைத்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது எப்படி?

உலகம் இப்போது நவீனமயமாக மாறிவிட்டது. எனவே பழைய உலகத்திற்கு ஏற்றவாறு திட்டங்களை உருவாக்குவது பயனற்றது. பொய் சொல்லி மக்களை ஏமாற்றலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. இம்முறை தேர்தல் முடிவுகள் அவர்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டும்.” என்றார்.