மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர் நியமனத்தில் நிலவிய தடைக்கு தீர்வு..

0
331

மத்திய மாகாணத்திலுள்ள ஆசிரிய உதவியாளர்களை வழமையான ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு இருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருடனான சந்திப்பின் பின்னர், இவர்களின் நியமனத்திற்கான அனுமதியை வழங்குவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத்திய மாகாணத்தில் நிரந்தர ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாத ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் தகைமை பூர்த்தி செய்து இம்மாதத்திற்குள் வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள இந்த நியமனம் தொடர்பில் சூரியா செய்திச் சேவை பல்வேறு சந்தர்ப்பங்களில் தகவல்களை வெளியிட்டிருந்தது.

இதேவேளை, பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய ஆசிரியர் உதவியாளர் நியமனத்துக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு 2,531 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.