சிறிய உரிமைகோரல் நீதிமன்ற வழக்குகளில் புதிய சிக்கல்

0
265

உள்நாட்டு வழக்குகள் தொடர்பில் நீதி அமைச்சகத்தால் நிறுவப்பட்ட சிறிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 25 நீதிமன்றங்களில் ஒன்று மாத்திரமே தற்போது செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 25 நீதிமன்றங்களும் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் செயற்படும் என நீதி அமைச்சகம் இதற்கு முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும் பௌதீக மற்றும் மனித வளங்களின் கடுமையான பற்றாக்குறையால் இந்த செயல்முறை தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றங்கள் இயங்காமைக்கான காரணம்

குறித்த நீதிமன்றங்கள் சிறிய அளவிலான பிணக்குகளை விசாரணை செய்து, அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் தீர்ப்புகளை வழங்க வேண்டும் என நீதி அமைச்சகம் அறிவித்திருந்தது.

சிறிய உரிமைகோரல் நீதிமன்ற வழக்குகளில் உருவாகியுள்ள புதிய சிக்கல் | Sri Lanka Court Jurists Crisis

அத்துடன் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகும், சர்ச்சைக்குரிய தரப்பினரை அழைத்து விசாரணையைத் தொடராமல் சமரசம் செய்ய இந்த நீதிமன்றங்கள் முயற்சி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டதோடு ஏனைய நீதிமன்றங்களின் சுமை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, கடுவெல, கண்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 25 சிறிய நீதிமன்றங்கள் நிறுவப்படவிருந்தன.

எனினும் இதுவரை கொழும்பில் மட்டுமே ஒரு நீதிமன்றம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டிட வசதிகள், உபகரணங்கள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமையை இந்த நீதிமன்றங்கள் இயங்காமைக்கான முக்கிய காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.