வட மாகாணத்திற்கும் அதிக நிதி ஒதுக்கிய ஜனாதிபதி; வட்டுவாகல் பாலத்திற்கு 1,000 மில்லியன் ரூபாய்

0
27

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வட மாகாணத்தில் கிராமப்புற வீதிகள், பாலங்களை புனரமைப்பதற்கு 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதோடு வட்டுவாகல் பால கட்டுமான ஆரம்பிப்புக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நிலையில் பாலம் திருத்தப்பட வேண்டும் என பல தரப்பினராலும் பல தடவைகள் கோரப்பட்டபோதும் நிதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் எவையும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்திற்கான நிதியை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கியதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களுக்கும் கூட்டுறவுப் பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோருக்கு முல்லைத்தீவு மக்களின் சார்பாக தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் நாடாளுமன்ற உப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.