‘இமாலயப் பிரகடனம்’ ஈழத்தமிழர்களின் உரிமைகளை பறித்துவிட்டது: அனந்தி சசிதரன் உலகத் தமிழர் பேரவைக்கு கடும் கண்டனம்!

0
135

இமாலயப் பிரகடனம் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தவில்லை. அதேபோல் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையையும் வலியுறுத்தவில்லை என வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இமாலயப் பிரகடனம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

“வரலாற்று ரீதியான தனித்துவமான இறைமைக்கு ஈழத்தமிழர்கள் உரித்துடையவர்கள் என்பதை இமாலயப் பிரகடனம் உரைக்கவில்லை மாறாக உதறிவிட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் தந்தை செல்வாவின் தலைமையில் மேற்கொண்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அற வலிமையை அழித்துவிடலாம் என்ற கற்பனையில் உலகில் உயரமான மலையில் இருந்து கனவு காண வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெள்ளையும் காவியும் தரித்தவர்கள் சிலர். இந்த வெண்ணிற ஆடைக்காரருக்கும் காவித் தரப்பினருக்கும் சில செய்திகளை சர்வதேச நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நான் இங்கே தெளிவாக முன்வைக்க விரும்புகிறேன்.

முதலில் தென்னிலங்கை பௌத்த மதபீடங்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி. ஈழத்தமிழர்கள் நல்லிணக்கத்தை எப்போதும் விரும்பியவர்கள்.

ஈழத்தமிழர்களின் நல்லிணக்கத்தை சீரழித்து இன அழிப்புச் சிந்தனைக்கு வழிகோலிய மகாவம்ச மனநிலையை நீங்கள் மாற்றினால் ஒழிய உண்மையான நல்லிணக்கம் ஏற்படாது.

உண்மையான நல்லிணக்கம் தான் உங்கள் நோக்கம் என்றால் அதை ஆரம்பிக்க வேண்டிய புள்ளிகள் எவை என்று எனது பார்வையில் உங்களுக்கு இரண்டு விடயங்களைச் சொல்லுவேன்.

உங்களுக்கு பௌத்த தந்த தாதுவைப் பேணும் தலதா மாளிகை எவ்வளவு புனிதமானதோ அதைப்போல உண்மையான வித்துடல்களை விதைத்த எமது மாவீரர் துயிலும் இல்லங்கள் எமக்குப் புனிதமானவை.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பின் வரலாறு சொல்லப்படவில்லை. இன அழிப்புக்கு சர்வதேச நீதி ஏன் அவசியம் என்பது சொல்லப்படவில்லை.

சுயநிர்ணய உரிமை பற்றி இம்மியளவும் இதில் எதுவும் இல்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்ட எமது தேசிய விடுதலைக்கான அடிப்படைகள் அனைத்தையும் அடியோடு உருட்டிப் பிரட்டிப் போடும் நோக்கோடு இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெண்ணிற ஆடைக் கூட்டம் ஆட்டுவிக்கப்படும் கூட்டம். ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதும் அவர்களின் திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதும் போகப் போக மேலும் துல்லியமாகத் தெரியவரும்.

இதற்குப் பின்னால் நீண்ட காலமாக ஈழத்தமிழர்களைக் குறிவைத்து இயங்கி தமது கஜானாக்களைத் திறந்துவிட்டு பலவீனமான நம்பிக்கை இழந்த செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களை மேசையில் இருத்தி சனநாயகம், வெளிப்படைத் தன்மை, உண்மைத் தேடல், ஒப்புக்கொள்ளல், நல்லிணக்கம் என்ற சொற்களின் உள்ளடக்கத்துக்கு எதிராக இரகசியமாகச் செயற்படும் இந்த அமைப்புகளால் ஏவி விடப்பட்டு அவர்களின் பரிசோதனைக்குப் பலியாகி வெள்ளை ஆடுகள் போலத் தோற்றமளிக்கும் கறுப்பு ஆடுகள்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் தமக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமற் செய்து ஈழத்தமிழர்களைப் ‘பிராக்காட்ட’ இந்தப் பிரகடனம் முயல்கிறது.

ஆனால் இது சரிவரப் போவதில்லை. பிராக்காட்ட உருவாக்கப்படும் பிரட்டுருட்டுப் பிரகடனங்கள் ஒருபோதும் எடுபடப் போவதில்லை.

மிகவும் அகலமாகப் பொருள்படுகின்ற, பரந்துபட்ட பொருள் தருகின்ற பொறுப்புக்கூறல், கூட்டு உரிமைகள், அதிகாரப் பங்கீடு, புதிய அரசியலமைப்பு என்பவற்றை ஆங்காங்கே பிரட்டி உருட்டி அதற்குள் அதுவும் இருக்கிறது இதுவும் இருக்கிறது என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதனை எந்த ஒரு வலுவுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாளாந்தம் மறுப்பு அறிக்கைகள் கூட்டாகவும் தனித்தனியாகவும் வந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாது சிதறடிக்கப்பட்டிருந்தாலும் புலம் பெயர் சூழலில் இயங்கும் பல அமைப்புகள் இதை மறுத்துவிட்டார்கள்.

தாயகத்திலும் ஈழத்தமிழர் தேசத்துக்கான அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் அமைப்புகளும் அரசியல் பிரதிநிதிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை” என தெரிவித்தார்.