‘சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றை தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது. அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இதற்கு பிரதான காரணமாகும்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மாவனெல்லை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ’வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலையை தொடர்ந்து கேகாலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து, மக்களுக்கு சேவை செய்வதற்கான சூழல் சமூகத்தில் இல்லை என்று குறிப்பிடுகின்றனர். இன்று சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றை தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வீர வசனங்கள் பேசினாலும், ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும் மக்கள் அவநம்பிக்கையுடனேயே வீடுகளிலிருந்து வெளியேறுகின்றனர். மாலையானால் தம்மால் உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்ற அச்சநிலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இந்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றன.
வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியமையே வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்டமை அப்பிரதேச சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியாகும். இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பொலிஸார் எந்த தகவலையும் வழங்கவில்லை. மாறாக அவர் தாமாகவே அதனை வெளிக் கொணர்ந்தார்.
வெலிகம மற்றும் மத்துகம சம்பவங்களில் உள்ள பொதுவான காரணி யாதெனில் இந்த இரு சபைகளிலும் ஜே. வி. பி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தமையாகும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும். சட்டத்தின் ஆட்சி நீதியை வழங்கும் செயல்முறை மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவே மக்கள் அதிகாரத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அரசாங்கமோ பாதாள உலகக் குழுக்களுக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கிறது.
அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இதற்கு பிரதான காரணமாகும். உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது மக்கள் சேவைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது குறித்து சபாநாயகருக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் எழுத்துபூர்வமாக அறிவித்துள்ள போதிலும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை’ என்றார்.



