சர்வதேச மட்டத்தில் இருந்து கிடைத்த தகவல்; உண்மையை மறைக்கும் மைத்திரி

0
128

உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த மைத்திரிபால சிறிசேனவால் (Maithripala Sirisena) முடியவில்லை அதற்கு அவருக்கு தற்துணிவு கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன (Kavinda Jayawardena) தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் காரணமாக பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிறுபிள்ளை போல பேசும் மைத்திரி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள போதும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மைக்கான காத்திருப்பு மாத்திரமே மிகுதியாகுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட வேண்டும். குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அவர் சொன்னார், இவர் சொன்னார், நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டார். சிறுபிள்ளை போல் பேசுகிறார். மக்கள் மத்தியில் உண்மையை குறிப்பிட அவருக்கு தற்றுணிவு கிடையாது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் 269 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டார் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். பலர் இன்றும் படுக்கையில் விசேட தேவையுடையவர்களாக உள்ளார்கள்.

இவர்களின் நிலையை கண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு மனவேதனை என்பதொன்று இல்லையா குண்டுத்தாக்குதல் அரசியல் தேவைக்காகவே நடத்தப்பட்டது என்பதற்கு பல விடயங்களை குறிப்பிடலாம்.

கிடைக்கப்பெற்ற சர்வதேச தகவல்

குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தற்கொலை குண்டுதாரியான ஜமீலின் வீட்டுக்கு சி.ஐ.டி.யினர் சென்றமை, மாத்தறை பொடி சஹ்ரான், சொனிக், சொனிக் என்ற சொல், அபூபக்கர், குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டமை அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.

அரசியல் நோக்கத்துக்காகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும் அரசியல் நோக்கத்துக்காவே பாதுகாக்கப்படுகிறார்.

ஆகவே மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்காகவேனும் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு நீதி வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் அதற்காக போராடுவோம் என குறிப்பிட்டார்.