கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் அரசாங்கம் கடந்த காலம் பற்றியும், கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறுகளை ஆராய்ந்து பேசுவதையே வழமையாக கொண்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் தங்களது வாக்குறுதிகள் தொடர்பில் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மீன்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.
மேலும் இறப்பர் தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே அரசாங்கம் ஒரு வருடத்தில் பெற்றுக் கொண்ட வெற்றியாகும். இவை அனைத்து தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.
அரசாங்கம் தற்போது பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. ஆகையினால், அரசாங்கம் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என கோருகின்றேன். அத்துடன் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.