ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 42 வருட நீண்ட அரசியல் அனுபவத்தின் காரணமாகவே இரண்டு வருடங்களில் வீழ்ந்திருந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்ததென ஐ.தே.கட்சி தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலியில் இடம்பெற்ற வைபவமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், சகலரும் ஒன்றிணைந்து முன்னேறினால் மாத்திரமே இந்த நாட்டு இளைஞர்களுக்கு எதிர்காலம் உண்டு.
இல்லையேல் பழைய நிலைக்கு நாடு செல்ல நேரிடும். பொதுவாக நாடு வீழ்ச்சியடைந்து செல்லும் போது, எதிர்கட்சிகள் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதில் இன்று வரை வெற்றியும் கண்டுள்ளார்.

அவ்வாறான ஒரு தலைவர் தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். எமக்கு முன்னுள்ள இன்றைய தேவை நம் நாடு தான். கடந்த உள்நாட்டுப் யுத்தத்தின் போது இது பொது மக்களுக்கு புரிய வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது முக்கியமல்ல.
அதனால் தான் ரணில் விக்கிரமசிங்க என்ற தேசிய தலைவர் சுயேச்சையாக இன்று போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றியடையச் செய்து, நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்றியமைக்க சகலரும் கட்சி பேதமின்றி வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.