சுவிஸ் நாட்டுக்கு சென்ற தமிழருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு, எதிர்வரும் மாகாண தேர்தலில் நான்கு தமிழர் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது: இருப்பினும் தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை என சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவு தற்போது மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
சுவிஸ் நாட்டுக்கு சென்ற தமிழருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. விரும்பியதை படிக்க அனுமதிக்கப்படுகிறது. விரும்பிய வேலையும் கிடைக்கிறது. அங்கு எதிர்வரும் மாகாண தேர்தலில் நான்கு தமிழர் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தாய்த் தமிழகத்திற்கு சென்ற தொப்புள்கொடி உறவுகள் நாற்பது வருடமாக அகதியாக வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை.
பயண கடவுச்சீட்டுகூட வழங்காமையால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவரவும் முடியவில்லை. ஏன் இந்த நிலை என்று கேட்டால் குடியுரிமை வழங்குவது மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளது என்று திமுக வினர் கூறுகின்றனர்.

காங்கிரசுடன் மத்திய அரசில் அமைச்சுப் பதவி பெற்று இருந்தபோது ஏன் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.
குடியுரிமை வழங்க அதிகாரம் இல்லை என்றால் எதற்கு தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்குகிறீர்கள்? ஈழத் தமிழர் அனாதைகள் இல்லை.
அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்று ஏன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகின்றார்? அடுத்தமுறை அயலக தமிழர் மாநாட்டில் போட்டோ எடுக்கும்போதாவது இது பற்றி நம் தலைவர்கள் பேசுவார்களா? என இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.