தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு: நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன்

0
77

தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்த ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.

விவாதங்களின் பின்னர் குறித்த தேசியபட்டியல் ஆசனத்தை ஏற்கனவே வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப.சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டார். நேற்றைய அரசியல் குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது.

மேலும், கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக சிறிதரன் இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே, நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன அதிகாரம் ஆகிய கட்சிகளும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை அறிவித்துள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தி சார்பில் பிமல் ரத்நாயக்க, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி அநுர கருணாதிலக்க, பேராசியரியர் உபாலி பன்னிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருண ஜயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியபெரும, ஜனித ருவான் கொடிதுவக்கு, ஸ்ரீ குமார ஜயகொடி, நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, லக்மாலி காஞ்சனா ஹேமரத்ன, சுனில் குமார கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவான் சந்திம ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, அபுபக்கர் ஆதம் பாவா மற்றும் ரத்நாயக்க ஹெட்டிகே உபாலி சமரசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீரவை நியமிக்க சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன் அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக் குழுவிற்கு இன்று அறிவித்துள்ளது.