நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு 18 மாதம் சிறை தண்டனை: ஊர்காவற்துறை நீதிமன்றம் தீர்ப்பு!

0
131

நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதான 13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன் அவர்களது மூன்று படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதான மீனவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது நேற்றைய தினம் 21 ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படகுகள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் அன்றையதினம் படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.