ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட, பேருவளை அமைப்பாளர் பதவி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் வெற்றிடமான நிலையில் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் இன்று திங்கட்கிழமை (14) பெற்றுக் கொண்டார்.
சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக நேற்று அறிவித்தார். அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஹூனுப்பிட்டி கங்காராம விகாரை வளாகத்தில் நேற்று (13) நடைபெற்றது.
ராஜித சேனாரத்ன ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் தனது ஆதரவை ஜனாதிபதி வழங்கிய நிலையில் அவரது இடத்திற்கு திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.